நல்ல நிலையில் இருப்பவர்கள் V/S நல்ல நிலையில் இல்லாதவர்கள்
என்கிற சூழல் அமையப்பெறின், அது நிச்சயம் தர்மசங்கடமான நிலை தான். பழைய மாணவர்கள் சந்திப்பு என்று ஒன்று வைப்பார்கள். நிச்சயம் எல்லோரும் ஒன்று கூடுவார்கள் என்று சொல்ல முடியாது. சிலர், கலந்து கொள்ள முடியாத சூழலில் இருப்பார்கள். சிலர் கலந்து கொள்ள விருப்பமில்லாதவர்களாய் இருப்பார்கள். "அங்க எப்படி போறது" என்கிற எண்ணம் வந்து விழும்.
சொந்த பந்தங்கள் நிறைய உள்ள குடும்பத்தில் ஒரே வயதுள்ள நிறைய பேரை பார்க்கலாம். படிக்கிறவரை, வேலைக்கு போகிற வரை எந்த வித்தியாசங்களும் தெரியாது. பிறகு தான் கிடைத்த வாழ்க்கைக்கும், கிடைக்காத வாழ்க்கைக்குமான வேறுபாடு கொடூரமாய் பிடிபட ஆரம்பிக்கும். தன் வளர்ச்சிக்கு தாம் என்ன செய்தோம்... என்ன செய்யவில்லை... என்ன செய்திருக்க வேண்டும் என்பதெல்லாம் உரைக்க ஆரம்பிக்கும்.
பெண்களுக்கு, இந்த ஏற்ற இறக்கங்கள்- பெரும்பாலும் திருமணம் மற்றும் அமைகின்ற கணவனாலேயே நிகழ்கிறது. பல பெண்களின் வாழ்க்கையை பார்த்த காரணத்தினால், நான் ஒரு சிறுகதையில் இப்படி எழுதி இருந்தேன். "ஒரு ஆணின் வாழ்க்கை சீரழிந்து போகிறது என்றால் முழுக்க முழுக்க அவனே காரணம்"... ஆனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சீரழிகிறது என்றால் - பெரும் பாலும் அவள் காரணமாக இருக்க மாட்டாள் என்று எழுதி இருந்தேன். இம்மாதிரியான சூழலில், பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை சந்திக்கவும் நேர்ந்தது, (அவரை பற்றி முழுமையாக இறுதியில்) நான் எழுதியது உண்மையாகவும் கூட இருக்கலாம்.
ஆண்கள் கூட, இந்த விஷயத்தை பெரிதாக எடுத்து கொள்ளாவிட்டாலும், பெண்களுக்கு இந்த ஏற்ற தாழ்வு ஈடு செய்ய முடியாத இழப்பு தான். மேட்டில் ஒரு கூட்டம். பள்ளத்தில் ஒரு கூட்டம். அண்ணாந்து பார்க்கும் நிலை ஒரு நரகம் தான். அதனாலேயே பெண்கள் அதீத கோப உணர்வுக்கு ஆளாகிறார்கள். கணவரோடு சண்டை போடுபவர்களாக மாறுகிறார்கள். ஆண்கள் கெட்ட சகவாசத்தில் வீழ்கிறார்கள்.
நல்ல நிலைமைக்கு வர போராடுவது பெரும்பாலும் இதற்காக தானோ. வளர்ச்சியடையாத காரணத்தால் ஒதுங்கி போவது ஒரு விதம் என்றால், பெரிய அளவிற்கு வளர்ச்சியடைந்த காரணத்தால் தீவு போல் வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள் - "முன்ன மாதிரி பழகினா உதவி கேட்பாங்க. பிஸ்னஸ் பாதிக்கும்" என்று பேசுவார்கள். எனது நண்பன் ஒருவன் நகை வணிகத்தில் இருக்கிறான். அவன் இப்படி தான் சொல்வான். "பணம் ஒழுங்கா வராது. லாபத்தை பெருமளவு இழக்க வேண்டி வரும்"... தொழில்ரீதியாக பழக்க வழக்கங்கள் சில சலுகைகளை எதிர்பார்க்கும். அது அவர்களை எரிச்சல் படுத்தும். அதனால் அவர்களின் தீவுத்தன்மைக்கு காரணம் சரி தான்.
வயது ஏற ஏற, உடல் வளர்ச்சிக்கு ஏற்ப, வாழ்விலும் வளர்ச்சி என்பது வளர்ந்து கொண்டே இருந்தால் தான் அழகு.
முதலில் சொல்லாமல் விட்ட, அந்த பெண்ணின் கதையை சொல்கிறேன். நாங்கள் எட்டு நண்பர்கள், ஒரு டீக்கடையில் தான் காலை வேளையை கழிப்போம். அந்த வழியே கல்லூரிக்கு செல்லும் ஒரு பெண், எங்கள் நண்பர்களில் ஒருவரை காதலித்தாள். நண்பர் தான் முதல் கல்லை எறிந்தார். நண்பர் வெகு, வெகு அழகாக இருப்பார். அந்த பெண்ணும் நண்பரை காதலித்ததில் ஆச்சர்யமில்லை. காதல் வளர்ந்தது.
அந்த சமயத்தில் தான், நான் முதல் முதலில் வேலைக்கு செல்ல துவங்கியதால், எல்லா பழக்க வழக்கங்களையும் துண்டித்து, நல்ல பையனாக வேலைக்கு சென்றேன். நண்பரையோ, அந்த பெண்ணையோ சந்திக்க கூடிய வாய்ப்பு வெகு காலம் கிட்டவில்லை. சில வருஷங்கள் கழித்து நண்பரை சந்தித்தேன். "கல்யாணம் முடிஞ்சிடுச்சு. லவ் பண்ணேன்ல. அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிட்டேன்" என்றார். நான், அவரது காதல் கல்யாணத்தில் முடியும் என்று நினைக்கவில்லை. காரணம், அப்போது அவருக்கு வயது இருபத்தியொன்று தான். அந்த பெண்ணுக்கும் அந்த வயது தான் இருக்கும்.
வீட்டிற்கு கூப்பிட்டார். கல்யாணமாகி ஆறு மாதமாகி இருந்ததாக சொன்னார். ரெண்டு பேர் வீட்டிலும் கல்யாணத்துக்கு ஒத்து கொண்டதாகவும், இப்போது தனிக்குடித்தனம் இருப்பதாகவும் சொன்னார். வீட்டிற்கு போனோம். என்னை அடையாளம் தெரிந்து, தோழி சிரித்தார். சிரித்தார் என்று சொல்வதை விட சிரிக்க முயற்சித்தார் என்று தான் சொல்ல வேண்டும். வழக்கமான புன்னகை மைனஸ். பால் கொடுத்தார். குடித்துவிட்டு நண்பருடன் வெளியே வந்தோம்.
"என்னவோ தெரியல. யாரோடும் பேச மாட்டேங்கிறா. எங்க கூப்பிட்டாலும் வர மாட்டேங்கிறா" என்றார் நண்பர். "வீட்டுல உங்களோட எப்படி இருக்காங்க" என்று கேட்டேன். "வீட்டுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல. நல்லா தான் இருக்கா. வெளியே கூப்பிட்டா வரமாட்டேங்கிறா. சொந்தகாரர்கள் வீட்டுக்கு கூட வர மாட்டேங்கிறா. பொருளாதார ரீதியா கஷ்டப்படுறோம் தான். ஒரு நகை நட்டுல்ல. நல்ல துணி இல்ல. அவ மனசுல என்ன இருக்குன்னு தெரியுது"...
"வெளிய போனா நாலு பேர் நாலு விதமா பேசுறாங்க. அது அவளுக்கு கஷ்டமா இருக்கு" என்றார். நண்பர் ஆட்டோ டிரைவர். நான் முன்பு சொன்ன மாதிரி, நல்ல நிலையில் இருப்பவர்கள் V/S நல்ல நிலையில் இல்லாதவர்கள்சந்தித்து கொள்வது தான் பிரச்சனை. தோழி வேலைக்கு வெளியே போக கூட அஞ்சினாள். அவர் இந்தியில் எல்லா பாடங்களும் தேர்ச்சியடைந்து. இந்தி
ஆசிரியை என்கிற நிலையை அடைந்திருந்தப்படியால், வீட்டிலேயே இந்தி கற்று தர துவங்கினார். நிறைய மாணவர்கள் சேர்ந்தார்கள்.
வருஷங்கள் ஓடியது. படிப்படியாக அவர் எட்டும் வளர்ச்சியையும் காண முடிந்தது. முகத்தில் தொலைந்து போய் இருந்த புன்னகையும் மலர்ந்தது. அவர் எதிர்பார்த்ததை அல்லது தொலைத்ததை அடைந்து விட்டார் என்று சொல்லலாம். வெற்றி என்பது நமக்காக இல்லையாயினும் பிறருக்காகவாவது- ஊர், உறவுக்காகவாவது நாம் அடைந்தே தீர வேண்டும்.