அடுத்த வகை... "தன் மனைவியின் புத்திசாலிசனத்தை சுத்தமாக ஏற்று கொள்ளாமலும், தானொரு புத்திசாலி இல்லை என்பதை ஏற்று கொள்ளாமலும்" இருக்கும் ரகம் மற்றொரு வகை. இவர்கள் மனதில் தான் மனைவியரின் நடத்தை குறித்து சந்தேகம் வருவது. அறிவோடு அழகும் இருந்து விட்டால், அந்த பெண்ணுக்கு வேறு வினையே இல்லை என்று சொல்லலாம்.
அப்படி தான் நடந்தது, நாமறிந்தவர்களின் வாழ்க்கை. அவர்கள் முதலில் எங்கள் தெருவில் தான் குடி இருந்தார்கள். அந்த பெண் அறிவோடும், அழகும் படைத்து இருந்தார். திருமணம் முடியும் வரை கிராமத்தில் வசித்தவர். அந்த கணவரை எனக்கு வெகு நாளாகவே தெரியும். சுய தொழில். வசதிக்கு பஞ்சமில்லை. பூர்விக சொத்து. மிக பெரிய காம்பவுண்ட் வீட்டின் மூலம் பல்லாயிரம் வாடகையாக கிடைத்தது. அப்பா தான் சொத்துகளை பராமரித்து வந்தார். கடை வைத்திருந்தார்கள். காலையில் பதினொரு மணிக்கு கடைக்கு போவார். போகும் போது, டாஸ்மாக் கடைக்கு போய் விட்டு தான் போவார்.
சில வருஷங்களுக்குள்ளாக குடும்பத்தின் நிலைமாறி சிக்கல் துவங்கியது. சில சொத்துக்கள் விற்கப்பட்டன. பணமாக, அவரவர் பங்கு பிரிக்கபட்டன. அந்த பெண்ணுக்கு புரிந்திருந்தது - தன் கணவன் புத்திசாலி இல்லை என்பது. அந்த பெண் மிக பெரிய புத்திசாலி. கிடைத்த பங்கு பணத்தை வைத்து, தங்கள் வாழ்க்கையை செப்பனிட முயற்சி கொண்டிருந்த வேளையில், தம்பதியருக்குள் மோதல் வெடித்தது. அவர் வேலைக்கே போகவில்லை. வீடு விற்று கிடைத்த பணத்தை வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.
எவ்வளவு காலம் சாப்பிட முடியும். அந்த பெண், ஏதேனும் தொழில் புரிய வாய்ப்பு தேடிய போது, கணவர் மனைவியை சந்தேகப்பட்டார். "தானும் புரியோஜனமில்லாமல்... பிறரையும் புரியோஜனப்பட விடாமல்"... மோதல் தான் வளர்ந்தது. "பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் அல்லது தீர்வு சொல்ல தெரியாமல்"... "நீ வெளிய போகக்கூடாது, யாரோடும் பேசக் கூடாது, எதுவும் செய்யக்கூடாது" என்றால்...
சந்தேகம் எல்லாவற்றையும் கொன்றுவிடும். சந்தோஷம், அன்பு, நம்பிக்கை என்று ஆரம்பித்து கடைசியில் தன்னையே. சரியாக இருபது தினங்களுக்கு முன்பாக, கணவன் விஷம் குடித்து விட்டான். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் ஐந்தாவது நாள் இறந்து போனான். இரண்டு குழந்தைகள்... வயது முறையே பதினொன்று மற்றும் ஐந்து.
புத்திசாலிதனமாய் இல்லாமல் இருப்பதில் தவறே இல்லை. தான் புத்திசாலி இல்லை என்பது தெரிந்தும், அதன் பிறகும் எதுவுமே கற்காமல் இருப்பது தான் தவறு.
