திருமணங்கள் சொர்க்கத்தில்... வாழ்க்கை நரகத்தில்...

அன்று பெரிய கார்த்திகை... "எங்க வீட்டுக்கு போகணும். ரெம்ப விஷேசமா விளக்கெல்லாம் வைச்சு சாமி கும்பிடுவோம். அக்கம்பக்கத்தாரோட ஜாலியா வெடி வெடிப்போம்" என்றாராம் அவர் மனைவி சிறு குழந்தையின் குதூகலத்துடன். "இங்க நம்ம வீட்டை இருட்டுல போட்டுட்டு அங்க விளக்கேத்த போறியா." என்று நண்பர் கேட்டு இருக்கிறார். புது மணப் பெண்களால் சட்டென்று இந்த வீட்டோடு ஒட்டுவது என்பது கடினம்.

தாய் வீட்டு ஞாபகங்களோடு தான், ஒவ்வொன்றையும் செய்வார்கள், சொல்வார்கள். "எங்க வீட்டுல எப்படியெல்லாம் இருந்தேன் தெரியுமா"... "எங்க வீட்டுல ஒண்ணும் சொல்ல மாட்டாங்க" என்று பழங்கதை பேச
துவங்குவார்கள். ஒரு நெருக்கம் வர சில காலம் ஆகும். அதை நண்பர் உணர்ந்து விட்டு கொடுத்திருக்கலாம். ஆனால் நண்பரோ, "போக கூடாது" என்று சொல்ல... நண்பரின் பிடிவாதத்தை பார்த்து, அந்த பெண் விட்டு கொடுத்திருக்கலாம். ஆனால் அவரும், "எங்க வீட்டுக்கு போவேன்" என்று பிடிவாதம் பிடிக்க, கடைசியாக நண்பர் அடித்து விட, "குடிகார பயலே" என்று அந்த பெண் சொல்ல...

பிரச்சனை பெரிதாக வெடித்தது. இவர் தான், பெண் பார்த்து பேசி முடித்த
பிறகு, அந்த பெண்ணோடு பேசி கொண்டே இருப்பதற்கு, புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். "எனக்கு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை. பட் நடக்கல. அதான் கிட்டத்தட்ட லவ் மேரேஜ் மாதிரியே" என்று சொல்லி இருக்கிறார் முன்பு. பெண் பேசி முடித்ததற்கும் கல்யாணத்திற்குமான இடைவெளி மூன்று மாதம்... திருமணத்திற்கு பிறகு அவர்கள் இணைந்து வாழ்ந்த காலமும் மூன்று மாதம்...

என்ன பேசினார்கள்... என்ன பழகினார்கள்... என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது. அவர்கள் பேச வேண்டியதை பேசவில்லை. தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து கொள்ளவில்லை.காதல் மணமே சிறந்தது - என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். பெற்றோர் பார்த்து முடித்து வைப்பதே சிறந்தது - என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இரண்டிலும் தோற்று போனவர்கள் இருக்கிறார்கள். இரண்டிலும் வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். நல்ல முறையில் வாழ, திருமண முறையை குற்றம் சொல்லவோ அல்லது பாராட்டவோ முடியாது. எந்த முறையாக இருந்தாலும் வாழ்கிற முறை முக்கியம். திருமணத்திற்கு முன்பே, நண்பர் அந்த பெண்ணிடம் "நா குடிப்பேன். தப்பா எடுத்துக்காதே" என்று சொன்னதற்கு, "இந்த காலத்துல யார் தான் குடிக்கல"என்று அந்த பெண் சொல்லி இருக்கிறார்.

அவரே தான் குடிகார பயலே என்றும் சொல்லி இருக்கிறார். காதல் ஒரு முகத்தை காட்டுகிறது என்றால் திருமணம் மற்றொரு பக்கத்தை காட்டுகிறது. பெண் வீட்டில் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்து விட்டார்கள். நண்பரின் அக்கா கணவர் காவல் துறையில் பணிபுரிவதால், பேசி தீர்த்து கொள்வதாக சொல்லி வெளியே வந்து விட்டார்கள். பேசி தீர்த்து கொண்டார்கள். விலகி கொண்டார்கள்.

சரி. இதில் இருவரில் யாரை குற்றம் சாட்டலாம். யார் குற்றவாளி. நிச்சயம் யாராவது ஒருவரே குற்றவாளியாக இருக்க முடியும். அவர்கள் பிரிந்து விட்ட இந்த இரண்டு வருஷ வாழ்க்கை பல உண்மைகளை சொல்லிவிட்டது. நண்பரின் வாழ்க்கையில் இந்த இரண்டு வருஷத்தில் எந்த மாற்றமும் நிகழவில்லை. அம்மா மட்டுமே. டூவிலரை வாங்கி விற்று அதில் கிடைக்கின்ற வருமானத்தில் வாழ்க்கை. திருமணம் முடிந்திருந்த போது, வேறு வேலை பார்த்தார். மறுமணம் செய்து கொள்ளவில்லை.

அந்த பெண் வாழ்க்கையை பார்த்தோமேயானால் - நிறைய மாற்றங்கள்.
திருமணம் முடிந்து விட்டது. அரசு வேலை வாய்ப்பு தேர்வெழுதி, வேலையும்
பெற்று விட்டார். ஒரு குழந்தை உள்ளது. அவருக்கு இழப்பு இழப்பாகவே,
இவருக்கு விழுந்த வெற்றிடம், சரியாக சரியானவர்களால் நிரப்பப்பட்டு
விட்டது.

ஒரு நாள் சிறுபிள்ளைத்தனமாக கேட்டேன். "நீங்க பொறுத்து போய்
இருக்கலாமோ"... அவர் பதிலொன்றும் சொல்லவில்லை.