பெண்களில் குதிகால் உயரம் அதிகம் உள்ள காலணிகளை அணிபவர்களின் தாம்பத்திய உறவு திருப்திகரமாக அமைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உயரம் அதிகம் உள்ள காலணிகளைப் பயன்படுத்தும் பெண்களின் அடி வயிற்றுத் தசைகள் மேம்படுவதுடன் தாம்பத்திய வாழ்க்கையில் பெண்களுக்கு அதிக ஊக்கத்தைக் கொடுப்பதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட இத்தாலிய சிறுநீரகவியல் துறை வல்லுநரான மருத்துவர் மரியா செரோட்டோ, குதிகால் உயரமான காலணிகளை அணிவது ஒன்றும் பெண்களின் உடல்நலத்தைப் பாதிக்காது என்று தெரிவித்துள்ளார். குதிகால் உயரமான காலணிகளை அணிவது பல்வேறு நோய்களுக்கு காரணியாக உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் இந்த ஆய்வு முடிவுகள் வேறுபட்டு காணப்படுகிறது.
ஐம்பது வயதுக்கு உட்பட்ட 66 பெண்களை தமது ஆய்வுக்கு மரியா செரோட்டோ ஈடுபடுத்தியுள்ளார். இந்த ஆய்வில் பங்கு கொண்ட அனைத்து பெண்களுக்கும் தரையில் இருந்து 15 டிகிரி கோணத்தில் 2 இஞ்ச் உயரமுள்ள காலணிகளை கொடுத்து அணியச் செய்துள்ளார். இந்த ஆய்வில் குதிகால் உயரமான காலணிகளை அணிந்த பெண்களுக்கு அடி வயிற்றுத் (பெல்விஸ்) தசையில் ஏற்பட்ட மின்அதிர்வை விட, சாதாரண காலணிகளை அணிந்த பெண்களுக்கு குறைவாக இருந்துள்ளதைக் கண்டறிந்ததாக மரியா செரோட்டோ கூறியுள்ளார்.
பெண்கள் உடல் அமைப்பில் இந்த அடி வயிற்றுத் தசைகள் முக்கியமானவையாகும். இவை பாலியல் உறவுகளில் சிறப்பாக ஈடுபடவும், திருப்தியை தருவதிலும் பெல்விக் உறுப்புக்கு முக்கிய பங்கு பணியாற்றுகின்றன.
சிறுநீர்ப்பை, குடல், கர்ப்பப்பை ஆகியவற்றின் செயல்பாடுகளுக்கு இவை உதவுகின்றன. இந்த உறுப்புக்கள் கர்ப்ப காலத்திலும் குழந்தை பிறப்புக்கு பின்பும் வலுவிழக்கின்றன. மேலும் பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போதும் இந்த உறுப்புகளின் வலு குறைகிறது. இந்த உறுப்புகள் வலுவுடன் இருப்பதற்கு உடற்பயிற்சிகள் உள்ள நிலையிலும், தமது கண்டுபிடிப்பு இந்த உடற்பயிற்சிகளிடம் இருந்து விலகி இருக்க உதவும் என்று மரியா செரோட்டோ தெரிவித்துள்ளார்.
பெல்விக் மண்டலத்தின் வலுவை தக்கவைத்துக் கொள்ளும் சரியான உடற்பயிற்சிகளை பெண்கள் தொடர்ந்து மேற்கொள்வது கடினம் என்றும், இதற்கு குதிகால் உயரமான காலணிகளை அணிவது சிறந்த தீர்வு என்று அவர் கூறியுள்ளார். எல்லாப் பெண்களும் விரும்பி அணிவதைப் போன்றே தாமும் குதிகால் உயரமுள்ள காலணிகளை விரும்பி அணிந்து வருவதாகவும் மரியாசெரோட்டோ தெரிவித்துள்ளார்.