பெண்ணின் ஒரு கருமுட்டைப்பையை நீக்கினால்...


பெண்ணின் கருமுட்டை பையில் ஒன்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால், உடலுறவின் போது எந்த மாற்றத்தையும் உணர இயலாது. கருமுட்டைப் பை (Ovary) என்பது பெண்ணுருப்பினை தாண்டி, உடலிற்கு உள்ளே அமைந்துள்ள ஒரு விஷயமாகும். இதனால் உங்கள் உடலுறவு சுகத்தில் எந்த பிரச்னையும் வர வாய்ப்பு இல்லை.

DERMOID OVARY CYST அல்லது MATURE TERATOMA என்று அழைக்கப்படும் “கருமுட்டைப் பை கட்டி” என்பது பரவாத, புற்றுப் பிரச்னை அல்லாத (non cancerous) ஒரு வளர்ச்சி. இதனால் அந்த பெண்ணின் இன்னொரு கருமுட்டைப் பை (Ovary) பாதிக்க வாய்ப்பு இல்லை. அவரின் அந்த கருமுட்டைப் பை நன்றாக வேலை செய்கிறது என்பது அவருக்கு சரியான அளவில் மாத விடாய் வருகிறது என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

கரு முட்டை (Ovum/egg) என்பது பெண்களுக்கு பிறக்கும் போதே இத்தனை என்று வரையறுக்கப்படுகிறது. அந்த முட்டைகள் அவர்களின் இரு கருமுட்டைப் பைகளிலுமே, கிட்டத்தட்ட சரி பாதியான எண்களில், தங்கி இருக்கும். பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். மருத்துவ முறையில், சரியான புள்ளி விவரத்துடன் சொல்ல வேண்டும் எனறால், இந்த அறுவை சிகிச்சையால், அந்த பெண்ணின் கரு முட்டைகள் பாதியாக குறைந்து விட்டன. இதனால் உங்களுக்கு பிள்ளை பெரும் வாய்ப்பும் குறைந்ததாக சொல்லலாம்.

ஆனால், நன்றாக யோசித்து பார்த்தால், நீங்கள் இரண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு அந்த பெண் உபயோகம் செய்ய வேண்டியதெல்லாம் இரண்டு கரு முட்டைகள் தான். இதனால் தேவைக்கு அதிகமாகவே அந்தப் பெண்ணிடம் கருமுட்டைகள் உள்ளன. இதனால் நடைமுறை வாழ்க்கையில் அந்தப் பெண்ணால், அதுவும் அந்த பெண் முப்பது வயதுக்கு கீழ் இருந்தால், கருவுற, பிள்ளைகள் பெற முடியும்.

ஒருவருக்கு இரண்டு சிறுநீரகத்தில் (Kidney) ஒன்று அகற்றப் பட்டது என்று உதாரணத்திற்காக வைத்துக் கொள்ளுங்கள், அவருக்கு ஒரு சிறு நீரகமே எல்லா வேலையையும் செய்து முடித்து விடும். அவரால் ஒரு சிறு நீரகம் அகற்றப் பட்டதை உணரக் கூட முடியாது, அந்த அளவுக்கு ரத்த சுத்திகரிப்பை ஒரு சிறு நீரகமே சிறப்பாக செய்து முடித்து விடும். ஆனால், ஏதோ, ஒரு விபத்தினாலோ, அல்லது எதிர்பாராத நோய் தாக்கத்தலோ இருக்கும் ஒரு சிறு நீரகதிற்கும் பாதிப்பு வந்து விட்டால் என்ன ஆகும்? இதே போல, அந்த பெண்ணால் உங்களுக்கு பிள்ளைகளை பெற்றுத் தர முடியும் என்றாலும், எதிர்பாராத விதமாக, இருக்கும் ஒரு கருப்பை மூட்டைக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால், அதற்கு அப்புறம், அந்தப் பெண்ணால் பிள்ளை பெற முடியாது என்பதே கசப்பான உண்மை.

அந்த பெண்ணின் மாத விடாய் முடிவு /முற்றல் (Menopause) கொஞ்சம் சீக்கிரமாகவே நடந்து விடும். ஏறத்தாழ பெண்களுக்கு இது ஐம்பது வயதில் நடுக்கும் என்றால், இந்தப் பெண்ணுக்கு இது நாற்பது வயதிலேயே நடக்க வாய்ப்பு உண்டு. இதனால் எந்த விதமான பாதிப்பும் இருக்காது.