அளவுக்கு மிஞ்சினால்...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும்,மருந்துமே நஞ்சாகும் போது, மற்றதை பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் அழிவு தான். சிறு மழை மனித வாழ்வை மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து ஜீவராசியையும் தழைக்க செய்யும். பெருமழை, மழையையே வெறுக்க செய்யும்.உலக வரைப்படத்தையே கூட மாற்றக்கூடிய சக்தி மழைக்கு உள்ளது.

மனிதனுக்கு கிடைக்கக்கூடிய சந்தோஷம் அளவுக்கு மிஞ்சினால் மகிழ்ச்சிக்கான மரியாதை குறைந்து விடும்.தோல்வி என்பது உள்ளவரை தான் வெற்றியின் அருமை,பெருமை புரியும்.வரும் தோல்வி கூட அளவுக்கு அதிகமாய் வந்தால், வாழ்வின் மீதான பற்றுதல் போய், கடவுள் மீதான நம்பிக்கை கூட போய் விட வாய்ப்புள்ளது.

நம்மிடம் உள்ள நம்பிக்கை அளவுக்கு மிஞ்சினால்,அதுவே ஆணவத்தை உண்டு பண்ணி, நம் அழிவுக்கு வழி வகுக்கக்கூடும். நம் பிள்ளைகள் மீதான கண்டிப்பு அளவுக்கு மிஞ்சினால், அதுவே அவர்களை தவறு செய்ய தூண்டும். மதத்தின் மீதான பற்றுதல, அளவுக்கு மிஞ்சினால் அதுவே மதத்தீவிரவாதமாகி உலகிற்கே அச்சுறுத்தலாகும். சில நேரம்ஆண், பெண் காதலே அளவுக்கு மிஞ்சினால்- சந்தேகம் எனும் வியாதியால் அதுவே கசந்து போக வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு தரும் சுதந்திரமே, அளவுக்கு மிஞ்சினால்- அவர்களை பொறுக்கிகளாக மாற்றி விடக்கூடும். சிறு நெருப்பு சமைக்க, தீபமேற்ற.. பெரு நெருப்பு ஆளையே எரித்து விடுமே... அதீத அழகு கூட ஆபத்துக்கு தானே வழி வகுக்குகிறது.

பணம் இரும்பு பெட்டியில் அளவுக்கதிகமாக உள்ள போதே பூட்டிற்கு மேல் பூட்டு போட வேண்டி உள்ளது. ப்ரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆசைகள் அளவுக்கு மிஞ்சியதால், உலகமே அடிமை கோலம் பூண்டது. சிங்களனுக்கு பௌதத்தின் மீது இருந்த ஆசை அளவுக்கு மிஞ்சியதால் தமிழர் பூமி சுடுகாடானது. காலங்காலமாய் உலகம் கற்று கொடுத்த பாடம் என்னவெனில், அளவுக்கு மிஞ்சினால் அழிவு தான்... ஆனாலும் ஆசைகளும், எண்ணங்களும் அளவுக்கு மிஞ்சியே போகிறது.

தனி மனிதனின் ஆசையும், கோபமும, ஏமாற்றமும் - அளவுக்கு மிஞ்சும் போது... சிலர் தான் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு ஆட்சியாளனின் ஆதிக்க குணம், அளவுக்கு மிஞ்சினால் - உலகின் கணிசமான பகுதி பாதிக்கப் படுகிறது. மதம் தன் ஆசையை ஆக்ரோஷமாய் வெளிக்காட்டும் போது, அதன் தீவிரத்தின் அளவு மிஞ்சும் போது ஒட்டு மொத்த உலகமே பாதிப்புக்குள்ளாகிறது.

தாராளமயம், உலக மயம்- எல்லாமே அளவுக்கு மிஞ்சிய ஆசைகளின் வெளிப்பாடுகள். குடிசை- அளவுக்கு மிஞ்சிய வறுமையின் அடையாளம். மாளிகை- அளவுக்கு மிஞ்சிய செழுமையின் அடையாளம். இரண்டுமே அருகருகே எனும் போது- அந்த ஏற்றத்தாழ்வே உலகை மாசுப்படுத்தும்.

எதுவுமே அளவுக்கு மிஞ்ச வேண்டாம்.உலகமும்,இயற்கையும்,மனிதமும்
சுபிட்சமாக இருக்கட்டும்.