வாழ்க்கையும் வாழ்ந்துப்பார்த்தலும்...

உண்மையில் வாழ்க்கை சிக்கல் நிறைந்தது தான்... வாழ்ந்து பார்த்தலை போன்ற ஒரு சித்ரவதை உலகில் வேறொன்றும் இல்லை தான்.ஆனாலும் வாழ்க்கையையும்,வாழ்ந்து பார்த்தலையும் சுகமானதாகவே பார்க்கிறேன்...

"என்னை மாதிரி இந்த உலகத்துல கஷ்டப்பட்டவன் எவனும் இல்ல" என்று ஒவ்வொருவரும் தம் கஷ்டம் குறித்து சொல்ல நாம் கேள்விப் பட்டு இருக்கிறோம்.

வாழ்க்கையின் சில துயரங்கள் பிரசவ வேதனைக்கு ஒப்பானவை.அந்த வலியும், வேதனையும் வேறு காரணங்கள் எதற்காகவாவது ஏற்பட்டால்- அதை ஏற்றுக்கொள்ள முடியாத, துயரம் சார்ந்த நிகழ்வாகவே பார்ப்போம். ஆனால் பிரசவித்த தாய், கண் விழித்து, தன் குழந்தையை பார்க்கும்போது "என் வலிக்கும், அது தந்த வேதனைக்கும் காரணம் இந்த குழந்தை தான்" என்றா நினைக்கும். இல்லையே. குழந்தையை வாரி அணைக்குமே. வலியை, வேதனையையும் நினைத்து, நினைத்து பார்க்கும். '

இரண்டு நபர்களுக்கு முன்னால் ஒரு கண்ணாடி குடுவையை வைத்து பாதியளவு தண்ணீர் ஊற்றி "க்ளாஸில் தண்ணீர் எவ்வளவு இருக்கு" என்று கேட்டார்கள். முதலாமவர்"அரை க்ளாஸ் காலியா இருக்கு,"என்றார். இரண்டாமவர்,"அரை க்ளாஸ் தண்ணீர் இருக்கு,"என்றார். இருவரிடத்திலும் ஒரே விஷயம் தான் கேட்கப்படுகிறது. இருவரும் வேறு வேறு பதில் சொல்கிறார்கள். ஆனால் இரண்டு விடையும் சரி தான். ஆனால்? ஒருவர் நிறையை பார்க்கிறார். ஒருவர் குறையை பார்க்கிறார். பதிலில் தவறு இல்லை. ஆனால் பார்வையில் தவறு உள்ளது.

அந்த பார்வைக்கோளாறு- ஒவ்வொரு மனிதனின் சந்தோஷத்தையும்,ஒவ்வொரு மனிதனின் துயரத்தையும் தீர்மானிக்கின்றன. க்ரிடிட் கார்ட் சந்தோஷமா,துயரமா,தீக்குச்சி-விளக்கேற்றவா... வீட்டை கொளுத்தவா,நாக்கு- நல்லது பேசவா... பிறரை தூற்றவா... எந்த செயலுமே இரண்டு வித வினையை தருகிறது. நல்லதாக மற்றும் கெட்டதாக... நமக்கு சாதகமாக மற்றும் பாதகமாக... ஏற்புடையதாக அல்லது ஏற்க முடையாதவையாக...

எல்லாமே இரண்டு முகங்களை காட்டும் போது- வாழ்க்கை பல முகத்தை காட்டுமே. இந்த இடுகையை படித்த பின்னால்- வாழ்க்கையும், வாழ்ந்துபார்த்தலும் மகிழ்ச்சியாக உங்களுக்கு தோன்றினால் மகிழ்ச்சி.