ஆண்கள் எப்படி இருக்க வேண்டுமென்று பெண்கள் நினைக்கிறார்கள்?




தொல்காப்பிய காலத்திலிருந்தே பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்ப்பது நான்கே நான்கு குணங்களைத் தான்.

அவையானவை (1) தன்மை, (2) நிறை, 3) ஓர்ப்பு, (4) கடைபிடி. அதென்ன தன்மை, நிறை, லொட்டு, லொசுக்கு... கேள்விப் பட்டதே இல்லையே என்கிறார்களா?


அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு... இதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இவை பெண்களின் குணம் என்று சொல்லப்படுவது போல, இதற்கு இணையாக ஆடவர் குணநலன்கள்தான் இந்த தன்மை, நிறை, ஓர்ப்பு மற்றும் கடைபிடி. பெண்களை ``இப்படி இரு, அப்படி இருக்காதே'' என்று சதா கட்டுப்படுத்திக்கொண்டே இருக்கும் சமுதாயத்தின் உபயத்தால் இந்த பெண் பால் குணங்கள் பிரபலமாகிவிட்டன. ஆண்களை இப்படி வற்புறுத்தாமல் விட்டதினாலோ என்னவோ இந்த ஆடவர் குணங்கள் இதுவரை பிரபலமாகவே இல்லை.

ஆனால் இப்படி தன்மையாக, நிறைவாக, பொறுமையாக சுயக்கட்டுப்பாடு அதிகம் கொண்டவனாய் இருப்பது தான் ஆண்களுக்கு அழகென்று தொல்காப்பியர் காலத்திலிருந்தே கருதப்பட்டு வந்தது. இவை எல்லாம் போக, பெரும்பாலான பெண்கள் ஆண் என்றாலே தைரியமானவன், பொறுப்பானவன், தன்னை பூ மாதிரி பார்த்துக் கொள்ளப் போகிறவன், தன் கடமைகளை முன் நின்று செய்பவன். எதற்கும் கலங்காத அஞ்சா நெஞ்சம் படைத்தவன், பரந்த மனப்பான்மை கொண்டவன், உலக நடப்புக்களை விரல் நுனியில் வைத்துக் கொண்டிருப்பவன் அன்பை லிட்டர் லிட்டராய் பொழிந்து, அவளிடம் ஆசையாய் பேசி, அவளை காதல் மழையில் நனைத்து களிப்புற வைக்கப் போகிறவன், தன்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் திரும்பிக்கூட பார்க்க மனம் வராதவன் என்று எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் பெண்களிடம் உள்ளன.

சரியான வழிகாட்டுதல் கிடைக்க கொடுத்து வைத்த மிகச் சில ஆண்களே மேலே சொன்ன மாதிரி எல்லாம் இருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இப்படிப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. மீதமுள்ள சாமான்ய ஆண்கள் எல்லாம் யதார்த்தத்தில் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

* பொறுப்பைத் தட்டிக்கழிப்பதில் கில்லாடியாய் சிலர்,

* பிரச்னை என்றதும் இருந்த இடமே தெரியாமல் திடுமென மாயமாய் மறைந்து போகும் மகா கோழைகளாய் சிலர்,

* பெண்ணைக் காப்பாற்றுவது என்றால் என்ன என்றே தெரியாமல் ஆபத்து நேரத்தில்கூட அருகில் இருக்கும் பெண்ணைத் தள்ளிவிட்டு தான் முந்திக்கொண்டு தப்பிக்க முயலும் சிலர்,

* கடமையா? எனக்கா? கிலோ எவ்வளவு என்று கேட்கும் சிலர்?

* இம் எனும் முன் பயந்து நடு நடுங்கி, பெண்ணின் தலையில் பழியை போட்டுவிட்டு ஜகா வாங்கி ஓடும் சிலர்.

* போன நூற்றாண்டின் கட்டுப் பெட்டியான அபிப்ராயங்களை இன்னமும் அப்படியே அடிபிறழாமல் கடைபிடிக்கும் டைனோஸர் காலத்து பிற்போக்குவாதிகள் பலர்.

* உலகத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் அடுத்த வேலை சாப்பாடும், தூங்க ஒரு ஓரமும் கிடைத்தால் போதும் என்று ஓசியில் உடம்பை வளர்க்கும் ஒட்டுண்ணிகளாக சிலர்.

* துணைவியிடம் அன்பாய் ஒரு வார்த்தை கூட பேசத் தெரியாத சிடுமூஞ்சிகளாக சிலர்.

* மனைவியை மகிழ்விக்கவே தெரியாத மண்டூகங்களாய் சிலர்.

* கணவனிடம் ஆசையாகப் பேசலாம் என்று இவள் காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்க, வந்ததும் வராததுமாய் தொலைக்காட்சியே கதி என்று கிடந்து விட்டு, அதிகாரம் செய்ய மட்டும் வாயை திறக்கும், மனைவியின் தேவைகளைப் புரிந்து நடந்து கொள்ளத் தெரியாத மக்குகளாக சிலர்.

* துணைவியை வெறும் ஒரு சமையல்காரி, சலவைத் தொழிலாளி, பிள்ளை பெறும் எந்திரம் என்ற அளவில் மட்டுமே நடத்திவிட்டு, தன் சுகம் மட்டுமே பிரதானம் என்று மனைவியை மனுஷியாகக் கூட மதிக்காத ஜந்துக்களாய் சிலர்.

* பக்கத்தில் மனைவி இருக்கும்போதே, போகிறவள் வருகிறவள் என்று எல்லாப் பெண்களையும், அவ்வளவு என்ன பெண் வடிவத்தில் இருக்கும் பொருட்களையும் பொம்மைகளையும் பார்த்தால் கூட ஓவராக ஜொள்ளு விடும் சபலக் கேசுகளாக சிலர்...

* மனைவியை அசிங்கமாகப் பேசியும், திட்டியும் அடித்தும், உதைத்தும், தான் எவ்வளவு பெரிய ஆண்மகன் என்று காட்டிக்கொள்ள முயலும் அரைகுறை ஆண்களாய் சிலர்.

இவை எல்லாம் சேர்ந்த மோசமான கலவையாய் சிலர் என்று பல ஆண்கள் இப்படி குறை ஆண்களாகவே இருக்கிறார்கள். ஏன் ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்?

பெண்கள் ஆசைப்படுவது போல ஆசையாய், ஹாஸ்யமாய், பாசமாய், கம்பீரமாய், குறும்பாய், துணிச்சலாய் ஆண்கள் ஏன் அதிகம் பேர் இருப்பதில்லை? என்று நீங்கள் பார்க்கும் ஆண்களை எல்லாம் உங்கள் மனதில் கற்பனை செய்து வைத்துள்ள ஆதர்ஷ ஆண்மகனோடு ஒப்பிட்டு, ``சீ, இவன் தேறமாட்டான்'' என்று மட்டம் தட்டி, மீண்டும் மீண்டும் மனம் நொந்து போகாதீர்கள்.

A man is not born, he is made. பிறக்கும் போதே எவனும் பேராண்மை மிக்கவனாய் இருப்பதில்லை. அவனை இப்படி ஓர் ஆண்மகனாய் மாற்றுவது தான் பெண்களின் மிகப் பெரிய சமூகப் பணி. தாயாய், தமக்கையாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், சகாவாய் இருந்து பெண்கள் எல்லோரும் தொடர்ந்து பதப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய ஆதர்ஷ ஆண் உருவாவதே இல்லை.

நீங்கள் எந்த பேராண்மைமிக்க மனிதனை வேண்டுமானாலும் உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்களேன், அவர்கள் எல்லாம் அத்தனை பேராண்மையைப் பெறக் காரணம், அவர்களை அப்படி பதப்படுத்திய பெண்களே. ஆனால் இந்த பேராண்மைமிக்க ஆண்களிடம் ஒரு பெரும் பிரச்னை என்னவென்றால், இந்த மஹா உத்தமனான ஆண்களால் பெண்களுக்கு எப்போதுமே பிரயோஜனம் இருந்ததில்லை.

புத்தரும், மஹாவீரரும், சங்கரரும், விவேகானந்தரும், ரமணரும், முத்துராமலிங்கரும், காமராஜரும், பெரியாரும் மிகவும் மேன்மையான ஆண்கள்தான். ஆனால் அவர்கள் மேன்மைக்குக் காரணமே, அவர்கள் பெண்களை விட சமூக மாற்றமே மேல் என்று வேறு இலக்காக இருந்ததுதான். பெண்களை திரும்பியும் பார்க்காமல் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, கொள்கை, இலட்சியம் என்று தன் இலக்கிலேயே குறியாய் இருந்ததாலேயே இந்த மாதிரி ஆண்களின் மேல் பெண்களுக்கெல்லாம் பெரிய ஈர்ப்பிருந்தது. ஆனால் இவ்வளவு வகீகரம் இருந்தும், மிகச் சிறந்த உதாரண புருஷர்களாய் இருந்தும், இவர்களால் பெண்களின் அகவாழ்க்கைக்கு எந்த உபயோகமும் இல்லை. இதை எல்லாம் கடந்த நிலையை, அடைந்திருந்தார்கள், இந்த பேராண்மைமிக்க மனிதர்கள்.

இவர்களைத் தவிர மற்ற ஆண்கள் எல்லோருமே சாமானியர்கள்தான். அதனால் தான் அவர்களுக்கு பெண் ஒரு முக்கியமான ஈர்ப்பு விசை ஆகிறாள். இப்படி சாமானிய ஆண்களுக்கே பெண்ணின் துணை தேவைப்படுகிறது என்பதால், வேறு வழியில்லாமல் இந்த குறை ஆண்களோடு ஒப்பேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் பெண்கள் எல்லாம்.

இதுதான் யதார்த்தம் என்பதால், ஆண்களை ஹேண்டில் செய்ய விரும்பும் பெண்கள் கற்றுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இரண்டாம் பாடம், acceptance. அதாவது, நிபந்தனையற்று ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை.

எந்த ஆணும் பெர்ஃபெக்ட் இல்லை. நாம் மஹாத்மா என்று நினைப்பவனும் மஹா கேவலமான வக்கிர கேஸாக இருக்கலாம். அதனால் ஆண்களை வெறுமனே தரப்பரிசோதனை செய்து மட்டம் தட்டுவதை நிறுத்தி விடுங்கள். பேரின்ப தேடலே பெரிது என்று பேராண்மைமிக்கவர்கள் போய்விடுவதால், சாதாரண ஆண்கள் மட்டுமே லௌகீக வாழ்க்கைக்கு மீந்து இருக்கிறார்கள். இந்த ஆண்கள் குறை ஆண்கள்தான் என்று நமக்கு ஏற்கெனவே தெரியுமே. பிறகு இவர்களை சும்மா சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன லாபம்? இவன் இப்படித் தான். இவனை இப்படியே ஏற்று, வழிக்குக் கொண்டு வருகிறேன், என்று பெண்கள் ஆண்களை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளப் பழகினால் தான், ஆண்களை ஹேண்டில் செய்யும் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர முடியும்.

அதை விட்டுவிட்டு, குறை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், நேரம் வீணாவதோடு, அரை ஆணை முழு ஆண் ஆக்குவதுதான் ஆட்டமே என்றான பிறகு, ஆண் ஏன் அரையாக இருக்கிறான் என்று எடுத்த எடுப்பிலேயே விதண்டாவாதம் பேசினால், இந்த ஆட்டத்தில் எப்படி முன்னேறுவதாம்?

ஆக, ஆண்களை ஹேண்டில் செய்ய வேண்டுமா, நீங்கள் கற்றுப் பழக வேண்டிய அடுத்த பாடம், அவனை அப்படியே ஏற்றுக்கொண்டு, பிறகு நீங்கள் விரும்பும்படி அவனை மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் முக்கியமான மேட்டரே, இந்த அப்படியே ஏற்றுஃபிகேஷன்தான். இது தான் உங்களுக்கான இந்த ஹோம் ஒர்க். உங்களைச் சுற்றியுள்ள உருப்பட்ட, உருப்படாத, ஆண்களைக் கண்டு மன சஞ்சலப்படாமல், அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்ளும் சகிப்புத் தன்மையைப் பழக்கிக் கொள்ள முயலுங்களேன்.