குழந்தை திருமணம்


மனியம்மா, ஆந்திராவின் ஒரு கிராமத்தில் தனது உறவினர் சூழ
அமர்ந்திருக்கிறார். அவர் கட்டியிருந்த சிவப்பு புடவையில் பதினொரு
வயதிற்கும் கீழானாவராகவே தெரிந்தார். ஒரு தந்தையால் தன் குழந்தைக்கு இதை மனமுவந்து செய்ய முடியமா? ஆனால், அவரோ “இங்கெல்லாம் அப்படித்தான் பழக்கம் என்கிறார். இதுதான் எங்களின் பாரம்பரியம், பெண்கள் சிறியவயதில் மணமுடித்துவிடவேண்டும். கணவர்கள் வயதில் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் சரி, சூழ்நிலையை அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும்” என்று முடிக்கிறார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு இப்படி
திருமணமாகிறது. வயதுக்கு வந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்
என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றனர். இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட
பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணமாகி விடுவதாக ஒரு ஆராய்ச்சி
சொல்கிறது. அப்படி திருமணமான பெண்கள் உடனடியாக பிள்ளை பேற்றுக்கும் ஆளாகி தங்களது பெண்மையையும் நிரூபிக்க வேண்டும்.

முழுமையாக வளர்ச்சியடையாத சரியான ஊட்டச்சத்தில்லாத இக்குழந்தைகளின் பிள்ளைப்பேறு பெரும்பாலும் மரணத்தில்தான் வந்து முடிகிறது. ஒவ்வொரு வருடமும் 1,00,000 தாய்களும் ஒரு மில்லியன் குழந்தைகளும் இந்தியாவில் மரணமடைகின்றனர்.

குழந்தை பேற்றுக்கு ஆளாகும் முன்பே மனியம்மாவின் திருமணம்
முறிந்துவிட்டது. மணமான இருவருடங்களிலேயே, மனியம்மாவின் கணவர்(வயது 20) மனியம்மாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார். 20 வயதான அவருக்கு மனியம்மா பாலுறவுக்கு ஏற்ற வகையில் இல்லையென்பதுதான் காரணம். கணவர் உங்களை எப்படி நடத்தினார் என்ற கேள்விக்கு மனியம்மா தயங்குகிறார். “அவரைப் பற்றி எதையும் நான் பேச விரும்பவில்லை” என்கிறார்.அவர் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளமுடியாதவராக தென்பட்டார்.மற்றுமொரு முறை மணம் செய்துக்கொள்வாரா என்ற கேள்விக்கு இல்லையென்று தலையசைக்கிறார்.

அக்‌ஷய திருதியை விழாவின் போது, பெரும்பாலான இந்திய கிராமங்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளிலும், பட்டாசுகளிலும் பெண்களின் பாடல்களிலும் மூழ்கியிருக்கும். அந்த திருமணங்களின் மணகள்கள்
மனியம்மாவைப் போன்ற குழந்தைகள்தான்.

வடழகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த ஹசீனா பள்ளியை விட்டு நிற்கவில்லை;அவர் பள்ளிக்கே செல்லவில்லை. ஹசீனாவுக்கு 13 வயதில் முதல் முறையாக மாதவிலக்கு ஏற்பட்டது. ஹசீனாவின் தாய் இறந்ததும் அவரை வளர்த்த அத்தை ஹசீனா உடனே திருமணம் செய்துக்கொள்ள வேண்டுமென்றார். ஹசீனாவுக்கு அவர் என்ன சொல்கிறாரென்று அப்போது விளங்கவில்லை; தனது வாழ்க்கையை முற்றிலுமாக திருப்பிப்போடுமென்றும் தெரிந்திருக்கவில்லை. “திருமணம் ஒரு விளையாட்டு என்று நினைத்தேன்” என்கிறார் அவர், கணவரது மூங்கில் குடிசையில் அமர்ந்தபடி.அவரது கைகள் புடவையின் முந்தானையின் ஓரங்களைத் திருகியபடியிருக்கின்றன.ஹசீனாவின் வயது இப்போது 15. அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருக்கிறார்.பிரசவங்களினால் ஏற்படும் சிக்கல்களும், உடல்நலத்தை பற்றிய அறியாமையும் மருத்துவ வசதியின்மையும் தகுந்த நேரத்துக்கு கிடைக்காத கவனிப்பும் இந்த மரணங்களை அதிகப்படுத்துகின்றன. அதற்கு ஹசீனாவும் விதிவிலக்கல்ல.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் வயது முறையே 11 மற்றும் 13 அஞ்சலி மற்றும் கரிஷ்மா திருணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது குடும்பத்துப் பெரியவர்கள் அவர்களுக்கு தயிரும் மஞ்சளும்
சேர்த்து தலையைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது
கைகளிலும் கால்களிலும் மருதாணி இடப்பட்டிருக்கிறது. “ஆமாம், எனக்கு பயமாக இருக்கிறது, இருக்காதா என்ன?” என்கிறார் கரிஷ்மா. ”நாங்கள் எங்கள்
கணவர்களை இன்னும் சந்திக்கவில்லை” என்கிறார்கள், லேசான எரிச்சலுடன்.
எப்படி தனது வீட்டையும், சகோதரியுடன் பள்ளிக்குச் செல்வதையும்
நேசித்தார்கள் என்று ரசித்து சொல்கிறார்கள்.தற்போது எல்லாமே முடிவுக்கு
வந்துவிட்டது .”கணவரது வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் செல்வது நடக்காத
காரியம். அங்கு சமையலும் வீட்டு வேலைகளையும்தான் செய்ய வேண்டும். வேறு ஒன்றும் இல்லை. தலையை எப்போதும் துணியால் மூடியிருக்க வேண்டும். எனது மாமியார் என்ன சொல்கிறாரோ அதை கேட்டு நடக்க வேண்டும்”.

குழந்தைத் திருமணங்கள் இந்திய சட்டத்திற்கு புறம்பானவை. குழந்தை திருமண தடுப்புச் சட்டம் பிரிட்டிஷ் காலத்திலேயே, 1929, நிறைவேற்றப்பட்டது. திருமணமாவதற்கு பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் நிரம்பியிருக்க வேண்டும். 1947-ல் போலிச் சுதந்திரம் பெற்றபின் இந்திய அரசாங்கம் இந்த சட்டதிட்டங்களை கடைபிடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. திருமண சீசன்களில் நான்கு வயதான குழந்தைக்கும் கூட மணம் நடப்பதை காணலாம். இந்தியாவிலேயே ராஜஸ்தானில்தான் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. ஜோத்பூரில் குழந்தைகள் நலவாரியத்தின் அதிகாரிகள் தொலைபேசியில் அது குறித்த புகார் குரலுக்காகக் காத்திருக்கிறார்கள்.ஆனால் அப்படி புகார்கள் பெரிய அளவில் வருவதில்லை.

இப்படி சட்டத்திற்கு புறம்பான திருமணங்களைப் பற்றி செய்தியை
தெரிவிப்பதற்காக அங்கு ஒரு ஹாட்லைன் இருக்கிறது. ஆனால், இந்த திருமணத்தை நடத்துபவர்கள் மிகவும் சாதுர்யமாக நடந்து கொள்வதாகக் கூறுகிறார்கள் இந்த அதிகாரிகள்.

”அவர்கள் எப்போதும் எங்களைவிட ஒரு அடி முன்பாக இருக்கிறார்கள்.
திருமணத் தேதியை முதலில் அறிவித்து விடுகிறார்கள். பிறகு தேதியையோ அல்லது இடத்தையோ மாற்றிவிடுகிறார்கள். ராஜஸ்தான் ஒரு பெரிய மாநிலம். போலிசாலும் எல்லா இடங்களை கண்காணிக்க இயலாது. தேவையான வாகனங்கள் இருந்தால் திருமணஙக்ளை அவ்விடத்திலேயே நிறுத்திவிடலாம். ஆனால்,அதற்கு கொஞ்சம் காலம் பிடிக்கும்” என்கிறார்கள் அவர்கள். அதுவரை அவர்கள் தொலைபேசியைத்தான் நம்பியிருக்கவேண்டும்.

சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அதை நடைமுறைப்படுத்துவதற்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளி இருக்கிறது. ஆந்திராவில் இந்தச்சட்டம்
நடைமுறைப்படுத்தப்பட்ட 4 நான்கு வருடங்களுக்குப் பிறகும் கிராம அளவில்
கூட அதிகாரிகளை நியமிக்கவில்லை. போலீசும் வழக்கம்போல கண்ணை மூடியபடி இருக்கிறது.

ஆந்திராவின் வாரங்கலில் உள்ளூர் சமூக ஆர்வலர் ஒருவர் குழந்தைத் திருமண வதையைப் பொறுக்க முடியாமல் நடக்கவிருந்த 60 குழந்தைத் திருமண விவரங்களை சேகரித்து போலிசிடம் கொடுத்தார். தடுத்து நிறுத்த உடனடியாக ஏற்பாடு செய்யும்படியும் கோரினார். ஒவ்வொரு கிராமம் கிராமமாக நடந்து சென்று இந்த விபரங்களைச் சேகரித்தார் அவர். இன்ஸ்பெகடர் மோகிலி துர்கையாவோ இதுவரை தான் ஒரு குழந்தைத் திருமணத்தைக் கூட தடுத்து நிறுத்தவில்லை என்கிறார்.

யூனிசெஃப்பின் தென்னிந்தியத்தலைவர் இதுபற்றி கூறுகையில்,”போலீசும் இந்த பாரம்பரிய பின்னணியிலிருந்தே வந்தவர்கள். அவர்கள் தங்களது சொந்த
குடும்பங்களுக்கெதிராக பேச விரும்புவதில்லை. பல நூற்றாண்டு காலமாக
தொடரும் இந்த பழக்கத்தை தவறென்று சொல்ல அவர்கள் விரும்புவதில்லை.
இதுபற்றி அவர்களுக்கே பயிற்சியும் அறிவும் தேவைப்படுகிறது” என்கிறார்.
இதுமட்டுமல்ல எல்லா மக்கள் பிரச்சினைகளிலும் அதிகாரத்திமிரோடும்,
ஆதிக்கத்தில் இருப்பவர்களையும் ஆதரிக்கின்ற போலீசை எப்படித் திருத்த
முடியும்?

இந்த பயிற்சியும் அறிவும் வரும் வரையும் தங்களது வாழ்க்கையை குழந்தைத்
திருமண மேடையில் தியாகம் செய்யும் பல்லாயிரக்கணக்கான சிறுமிகளின் நிலைமை என்ன? குழந்தைத் திருமணம் நமது நாட்டில் பால்ய விவாகம் என்ற பெயரில் தொடர்ந்து வந்துள்ளது. இதற்கு சாதிய படிநிலையும் ஒரு காரணம். பிறப்பால் வரும் சாதியும், சொத்துடைமையும் திருமணத்தை பல்வேறு சாதிகளுக்குள் நடைபெறுவதை அனுமதிப்பதில்லை.மேலும், இளைய தலைமுறையினர் இவ்விதிகளை உணர்ச்சிவசத்தில் மீறுவதைத்தடுக்கவும் இந்த குழந்தைத் திருமணங்கள் பயன்படுகின்றன. மேலும், தற்போது இப்பழக்கம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களிடமே பெருமளவில் காணப்படுகிறது.படிப்பு, சாதிநிலை, மதம், வருமானம் மற்றும்
வட்டாரங்கள் முதலியவை சமூகப் பொருளாதார வேற்றுமைகளில் பிரதிபலிப்பதோடு குழந்தைபேறு உடல்நலத்தில் பிரதிபலிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, ஹசினா வாழும் அஸ்ஸாம், சில பத்தாண்டுகளாகவே
வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது. நிர்வாக அலட்சியமும், ஊழலும், ராணுவ
அடக்குமுறையும் தொடர்ந்து இருக்கிறது. இது பிரசவகால மரணங்களை பெருமளவு உயர்த்தியுள்ளது. அரசாங்க புள்ளிவிவரப்படி, 100,000 பிரசவங்களில் 480 மரணங்கள் ஏற்படுகின்றன.

ஹைதராபாத்தின் மகாத்மா காந்தி மருத்துவமனையில் 15வயதுப்பெண் அவசர கால சிகிச்சைக்கு விரைந்து எடுத்துச் செல்லப்படுகிறாள்.. வலியால் துடித்தபடி
இருக்கும் இந்தப்பெண்ணே, ஒரு குழந்தையே குழந்தையை சுமந்தால் ஏற்படும்
நிலைக்கு, ஒரு சிறந்த உதாரணம் என்கிறார் டாக்டர் ஷைலஜா. ”அவளுக்கு
ரத்தக்கொதிப்பு உயர்திருக்கிறது. அவளது இடுப்பு மிகவும் சிறியதாக
இருப்பதால் குழந்தை வெளியே வர முடியாமல் மாட்டிக்கொள்ளும். இந்த
நேரங்களில் சிசேரியனைத் தவிர வேறு வழியில்லை,” என்கிறார் அவர்.
அப்பெண் 200 கிமீ பிரயாணம் செய்து சரியான நேரத்துக்கு
வந்திருக்கிறாள்.ஆனால், பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே
பிரசவிக்கிறார்கள். இம்மாதிரியான சிக்கல்களால் தாயும் குழந்தையும்
ஒருசேர இறக்கிறார்கள். சிறுவயதிலேயே இக்குழந்தைகள் திருமணத்தின் பெயரால் தொடர் கற்பழிப்புக்கும் பாலியல் வன்முறைக்கும் உள்ளாகிறார்கள்.
எதிர்ப்பதற்கோ தடுப்பதற்கோ வழியில்லாமல் இந்த வன்முறைக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள்.

”Broken Voice” என்ற புத்தகத்தில் ஒரு பெண் 13 வயதில் திருமணம் என்றால்
எப்படி இருக்கும் என்பதை “என் கணவனை பார்த்து எனக்கு மிகவும் பயமாக
இருந்தது. அவர் என்னைவிட மிகவும் பெரியவராக இருந்தார்.. அவர் என்னைத்
தொடக்கூடும் என்பதால், வீட்டுக்கு அவர் வருவதையே நான் விரும்பவில்லை” என்கிறார்.

18 வயதுக்குள்ளான பெண்களிடம்தான் அதிகளவு எச்ஐவி நோய்த்தொற்று இருப்பதாக ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. பாதுகாப்பில்லாத பாலுறவு, ஒருவருக்கு மேற்பட்டவர்களுடன் உறவு போன்றவற்றை ஆண்களுக்கிடையே முறைப்படுத்துவது இன்றுவரை சவாலாக இருக்கிறது. குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் சமூகங்களில் அது இன்னும் அதிகமாக இருக்கிறது.

திருமணமான குழந்தைகளோ பெண்களோ கணவன் மூலமாக எச்ஐவிக்கு ஆளானால்,அவர்களது குடும்பமும் சமூகமும் கணவனது உடல்நிலைக்கு காரணமாக மனைவியையே குற்றவாளிகளாக்குகின்றனர். அதுவும், கருவுற்றிருக்கும்போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் வீட்டைவிட்டு வீதிக்குத் துரத்திவிடப்படும் குழந்தைகள் இன்னும் அதிகமான ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

ஹைதராபாத்தின் அந்த மருத்துவமனையில் பிரசவ அறைகளிலொன்றில் நிற்கிறார் டாக்டர் ஷைலஜா. “விரைவில் மகப்பேறுக்கு ஆளானால் ஏற்படும் கதியை பாருங்கள்” என்று சொல்லி, அப்பெண்ணின் நாக்கை உள்அன்னத்தில் மடக்கச் சொல்கிறார். தாய் அனீமிக்காக இருப்பதோடு, குழந்தையும் மிகுந்த எடைகுறைவாக இருப்பதாகச் சொல்கிறார். அதிர்ஷ்டமிருந்தால் இவன் பிழைப்பான் என்று ஆங்கிலத்தில் சொன்னதை அந்தத்தாய் புரிந்து கொள்ளவில்லை.

அங்கிருந்து, பெண்கள் நலப்பிரிவுக்கு சென்றால், ஹிஸ்டெரக்டமிக்கு ஆளான
அநேக பெண்களை பார்க்க முடிந்தது. 23 வயதுக்கும் குறைவான பெண்கள் அவர்கள். அவர்கள் வீட்டுக்கு செல்லும் போது இனி குழந்தைப்பேற்றுக்கு ஆளாகாத நிலையில் இருப்பார்கள். வீட்டு வேலைகளிலும் அவர்களால் ஈடுபடமுடியாது. பெரும்பாலானோரை அவர்களது கணவர்கள் வீட்டைவிட்டு அனுப்பி விடுவார்கள்.

அஸ்ஸாமைச் சேர்ந்த ஹசீனாவின் நிலைமை இன்னும் மோசம். அவரைப் போன்று மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த கிராமங்களில் சிலவற்றிற்கு இன்னும் மின்சார வசதி கூட இல்லை. சாலைகளும், பள்ளிகளுமோ அல்லது பொதுவசதிகளோ எதுவும் இல்லை.பெரும்பாலும் ஆற்றில் மீன் பிடித்தோ விவசாயம் செய்தோதான் வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

30 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த மாநிலத்தில் விவசாயத்துக்கு போதிய
நிலையில்லா விட்டாலும் எங்கும் செல்ல வசதிவாய்ப்பின்றி இங்கேயே வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஹசீனா அருகிலிருக்கும் ஒரு வடகிழக்கு
ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவமனைக்குச் செல்கிறார்.அரசாங்க உதவி பெறும் அந்த மருத்துவமனையிலிருந்துதான் பிரம்மபுத்திரா நதியைக் கடந்து மருத்துவ உதவிகள் ஹசீனாவின் கிராமத்துக்கு வரவேண்டும்.

அந்த மருத்துவமனையின் நர்ஸ் ஹசீனாவின் உடல்நிலையைக் குறித்தும் நலங்களைக் குறித்தும் கேள்விகள் கேட்கிறார். ஹசீனாவுக்கு மருத்துவ வசதிகளுடன் வரும் படகுகளைக் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஏனெனில், ஹசீனாவின் வீடு இன்னும் ஒரு ஓடையைக் கடந்து இருக்கிறது.அங்கு எந்த மருத்துவ வசதிகளோ வாய்ப்போ இல்லை.மேலும், ஹசீனாவுக்குத் தெரிந்த ஆர்வலரும் அதனைப் பற்றி சொல்லவில்லை.

ஹசீனாவை பரிசோதித்த நர்ஸ் அஸ்ஸாமின் மற்ற எல்லா கருவுற்றிருக்கும்
பெண்களைப் போலவே ஹசீனாவும் அனிமிக்காக இருப்பதாக தெரிவிக்கிறார்.
ஹசீனாவின் ஹீமோகுளோபின் 6.4 என்றும் சொல்கிறார். இந்தியப்பெண்களுக்கு ஒரு டெசிலிட்டருக்கு 11 கிராம் இருக்கவேண்டும். கருவுற்றிருக்கும் பெண்கள் அனிமிக்காக இருக்கும்போது குறித்த நேரத்துக்கு முன்பாக குழந்தை பிறக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம். அதோடு நோய்தொற்றுக்கான வாய்ப்புகளும் அதிகம். அதுவும் மருத்துவ வசதிகளெதுவும் இல்லாத அவசரத்துக்கு மருத்துவ
வசதிகள் கிட்டாத இப்பெண்கள் மரணத்தின் வாயிலிலிருக்கிறார்கள்.
பேறுகாலத்தில் மருத்துவமனைக்குச் செல்வதைவிட வீட்டில் இருப்பதையே ஹசீனா விரும்புகிறார்.

அரசாங்க மருத்துவமனைக்குச் சென்றால் அரசாங்கத்திலிருது 1400 ரூபாய்கள் வருமென்றாலும் ஹசீனாவின் வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வது 1500 ரூபாய்களாகும் என்றும் அதோடு மருத்துவமனைக்கும் ஆரம்பத்தில் பணம் செலுத்த வேண்டியிருக்குமென்றும் கூறுகிறார். அதோடு, பேறுகாலத்தில் ஆண் மருத்துவர்கள் தன்னை உடலில்
துணியில்லாமல் பார்ப்பதை விரும்பவில்லை என்றும் கூறுகிறார்.
பெற்றோர் சொல்வதைப் போல மருத்துவ வசதியில்லாமல் வீட்டில் பிரசவித்தால் இறப்பை சந்திக்க நேரிடும் என்கிறார், நர்ஸ் ஒரு குழந்தைக்குச் சொல்வதைப்போல.“செத்தா செத்துட்டு போறேன்” என்கிறாள் ஹசீனா தனது தலையிலிருக்கும் துணியை இழுத்துவிட்டபடி.ஹசீனாவைப் போன்ற எண்ணற்ற குழந்தை மணமகள்களுக்கு வாழ்க்கை என்பது அவ்வளவுதான்.

உலகில் மூன்றில் ஒரு பங்கு குழந்தை திருமணம் இந்தியாவில் நடக்கின்றது என்று UNICEF தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான முன்னேற்றம் என்ற தலைப்பிட்ட ஒரு அறிக்கையில், படிப்பறிவு வெகுவாக வளர்ந்துள்ள போதிலும் பாரம்பரியம், மற்றும் மத நம்பிக்கைகள் இந்தியாவில் குழந்தை திருமணத்தின் காரணமாக இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

உலகின் மற்ற பகுதிகளை விட தெற்கு ஆசியாவில் தான் குழந்தை திருமணங்கள் அதிகமாக நடக்கின்றன என்றும் மேலும் இதனால் பதிவு செய்யப்படாத பிறப்புகளும் அதிகரிக்கின்றன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. தெற்கு ஆசியாவில் இந்தியா மற்றும் நேபாளில் தான் அதிகமாக குழந்தைகள் திருமணங்கள் நடக்கின்றன என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

தெற்கு ஆசியாவில் 2007 ல் பிறந்த 47% குழந்தைகள் பதிவு செய்யப்படாத பிறப்புகளில் பிறந்தவை என்று கூறுகின்றது. இந்தக் கணக்கெடுப்பில் மொத்தமுள்ள 24 மில்லியன் குழந்தைகளில் இந்தியாவில் மட்டும் 16 மில்லியன் அடங்கும்.