
உடல் பருமன் குறிப்பாக குழந்தைப் பருவம் மற்றும் வளர் இளம் பருவ ஆண், பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது.இதனால் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றுக்கு சிறு வயதிலேயே ஆளாகிறார்கள். இதற்குக் காரணம் உணவுக்கு ஏற்ற உழைப்பு இல்லாமை, அளவுக்கு அதிக உணவு, கொழுப்புச் சத்து மிகுந்த தின்பண்டங்கள், பொரித்த உணவு, சிப்ஸ், பப்ஸ் போன்றவை சாப்பிடுவதே.
இளம் வயதில் உடல் வளர்ச்சி பெற அதிக உணவு தேவைப்படுகிறது .ஆனால் அதுவே ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வளர மறுத்து, அபரிமிதமான உணவை நஞ்சு என்று கருதும். உடலின் தேவைக்கு மட்டும் உண்ணப் பழக வேண்டும்.
உடல் உழைப்பு மிகுந்தவர்கள் அதற்கேற்றவாறு அதிகப்படியான கலோரி சாப்பிட வேண்டும். உடலுழைப்பு குறைவாக வேலை செய்பவர்கள் அதற்கேற்ப அதிக கலோரி தரும் உணவை குறைத்துக்கொள்ள வேண்டும்.
தேவைக்கு அதிகமான உணவை நீங்கள் சாப்பிட்டு, அது கலோரியாக செலவிடப்படாத நிலையில், உடலில் கொழுப்புச் சத்து அதிகரிக்கிறது; விளைவு உடலின் எடை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து உடல் பருமன் பிரச்னையாக மாறுகிறது.சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் உள்பட பல நோய்கள் வந்துவிடும்.
கொழுப்புச் சத்து நிறைந்த பால்-தயிர்-சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்த்து, பருப்பு, மஞ்சள் கரு இல்லாத முட்டை, சோயா போன்ற புரதச் சத்து நிறைந்த உணவைச் சாப்பிடத் தொடங்குங்கள்.
நகர வாழ்க்கையில் உடல் உழைப்பு குறைந்துவிட்டதால் நமது உணவுப் பழக்க வழக்கங்களையும் அதுபோல் மாற்றிக்கொள்ளவேண்டும். அதிக உடல் உழைப்பு இல்லாத நிலையில் 6 இட்லி சாப்பிடுபவர்கள் அதை 4-ஆகக் குறைத்துக் கொள்ளலாம்.இட்லியின் எண்ணிக்கையைக் குறைத்தால் அடுத்த வேளை முன்கூட்டியே பசி எடுக்கும். அதை ஈடுகட்ட சாம்பார், சட்னியின் அளவை அதிகப்படுத்த வேண்டும். சத்துகளை மட்டுமே தந்து எடையை அதிகரிக்காது என்பதால் பச்சைக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிடலாம். அசைவ உணவைத் தவிர்ப்பது நல்லது. சாப்பிடுகிற இட்லி, சாதம் போன்றவற்றைக் குறைத்து அதை ஈடு கட்ட சாம்பார், கூட்டு, பொறியல் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.இப்படி நோய் வராமல் தடுக்க நம் உணவு முறைகளை மாற்றி பயன் பெறலாம். பசி எடுத்தவுடன் இஷ்டம்போல் சாப்பிடாமல், சிந்தித்து சத்தான சமச்சீரான உணவுகளை சிறு வயதிலிருந்தே சாப்பிட்டுப் பழக வேண்டும். நோய் வந்தாலும் உணவு பாதி, மருந்து பாதி என பிரச்னைகளை நாமே எளிதாக தீர்த்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியத்தின் மற்றொரு பெரிய அம்சம் உடற்பயிற்சி. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட உடல் உறுப்புகளுக்கு அசைவு கொடுத்து நாம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்யும் நிலையில் தசைகள் வலுப்படும்; எலும்புகள் உறுதிப்படும். "தண்ணீர் கொண்டு வா! ஃபேனை போடு, லைட்டை அணைத்து விடு! என்றெல்லாம் மற்றவருக்கு கட்டளையிடாமல் அன்றாட வேலைகளை நாமே செய்யலாம். பக்கத்தில் மார்க்கெட் போக முடிந்த அளவு மோட்டார் பைக்கை தவிர்த்து நடந்தே போகலாம்.உடற்பயிற்சியினால் ரத்த ஓட்டம் சீர்பட்டு, உடம்பின் உறுப்புகளைச் செம்மையாக செயல்பட வைக்கின்றது.