புகை நமக்குப் பகை



போதையை எற்படுத்துதல்:

புகைத்தல் போதையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக ஆரம்பபழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகிறது. ஏனைய போதைவஸ்துக்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாத போதும், மிகக் குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள்.

சோர்வை ஏற்படுத்தல்:
புகைப்பதனால் போதை ஏற்படுவது இல்லை என்று வாதிப்போரும் புகைத்தல் சோர்வை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதில்லை.

உடல் நலனுக்கு ஏற்படும் கேடு:
புகைப்பதனால் உடல்நலனுக்கு ஏற்படும் பயங்கரமான பாதிப்புக்களை பற்றியும் சுகாதாரக் கேடுகளைப் பற்றியும் நவீன மருத்துவம் மிக விரிவாகப் பேசுகிறது. ஒரு காலத்தில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி உறுதியான, முடிவான, அறிவியல் ரீதியான ஆய்வுகள், முடிவுகள் இருக்கவில்லை என்பதனால் இது பற்றிய நிலைப்பாடுகளும் வேறுபட்டன. ஆனால் இன்று இதன் கேடுகள் குறித்து எத்தகைய சந்தேகத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு இது பற்றிய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.

வருடாந்தம் புகைத்தல் தொடர்பான நோய்களினால் 2.5 மில்லியன் மக்கள் வயதாவதற்கு முன்னதாகவே இறப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிக்கிறார். அதாவது ஒவ்வொரு 13 வினாடிகளுக்கும் ஒரு மரணம் இதன் மூலம் சம்பவிக்கின்றது. மற்றுமோர் ஆய்வின்படி புகைப்பதினால் தினமும் 300 பேர் கொல்லப்படுகிறார்;கள். இன்னுமோர் ஆய்வின்படி தினமும் இரண்டு சிகரெட்டுக்கு மேல் புகைப்பிடிப்பவர்களில் நான்கில் ஒருவர் வயதாவதற்கு முன்பே இறக்கிறார்.

புகைத்தலால் பல் வேறுபட்ட நோய்கள் உருவாகின்றன. புகைபிடிப்பதனால் ஏற்படும் நோய்களில் புற்று நோய் குறிப்பிடத்தக்கதாகும். பலவிதமான புற்றுநோய்கள் இருக்கின்றன. பிற புற்று நோய்களைவிட நுரையீரல் புற்று நோயால் அதிகமான மக்கள் மரணமடைகிறார்கள்.90 வீதத்துக்கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய், புகைப்பிடிப்பதனால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்த நோய் தொற்றிக் கொள்ளும் அபாயம், புகை பிடிக்காதவர்களைக் காட்டிலும் புகை பிடிப்பவர்களுக்கு 15 மடங்கு அதிகமாகவுள்ளது.

தொண்டை அல்லது வாய்ப் புற்றுநோய் அபாயத்தை புகைப்பிடித்தல் தோற்றுவிக்கிறது. மேலும் புகைப் பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் உணவுக்குழல், இரைப்பை புற்றுநோயினால் இறக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. புகைப்பிடிக்காதவர்களைவிட புகை பிடிப்பவர்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றாலும் தாக்கப்படும் ஆபத்தும் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.

புகைப்பிடித்தல் இருதய நோய்;களுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகைக்கப்படும் சிகரெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு மாரடைப்பு ஏற்றபடுவதற்கான வாய்ப்பும் தீவிரமடைகிறது. சிகரெட்டில் நிகோடின் அடங்கலான 4000 கேடு விளைவிக்கும் இரசயானப் பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.

புற்றுநோய், இருதய நோய்கள் மட்டுமன்றி புகைப்பிடிப்பதால் அபாயகரமான சுவாசக் கோளாறுகளும் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மார்புச் சளி, ஆஸ்துமா, எம்பிஸிமா(Emphysema) உட்பட மற்றும் பல சுவாசக் கோளாறு நோய்களை புகைத்தல் தீவிரப்படுத்துகிறது என்பதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன.

புகைப்பிடித்தல் இனப்பெருக்க, சுகாதாரத்திற்கும் ஊறுவிளைவிக்கும் என்பதும் மருத்துவம் கூறும் மற்றுமோர் உண்மையாகும்.

சொத்தைப்பல், பல்விழுதல்,ஈறு வீக்கம், வாயில் துர்நாற்றம் முதலான நோய்களுக்கும் புகைத்தல் காரணமாக அமைகிறது. மேலும் புகைத்தல் நுகர்திறனைக் குறைக்கின்றது. உபயோகிக்கும் மருந்துகளின் பயன்தரும் திறனைக் குறைக்கிறது. குடற்புண் நோய்களை தீவிரப்படுத்துகிறது.

பொருள் நஷ்டம்:
புகைப்பிடிப்பதனால் பணம் விரயமாகிறது. உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றிற்காக பணம் விரயமாக்கப்படுகிறது.

ஆன்மாவுக்கு ஏற்படும் தீங்கு:
புகைத்தலுக்கு பழக்கப்பட்டவர்கள் தமது மனோவலிமையை இழந்து இத்தீய பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர்.ஏதோ காரணத்தால் புகைபிடிக்கின்ற சந்தர்ப்பத்தை இழக்கின்ற வேளையில் இத்தகையோரின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் கேவலமானதாகவும் கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன என்பதை அவதானிக்க முடியும்.